சென்னை: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் விஜயேந்திரன். இவர் தாம்பரத்தில் உள்ள துணி கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கடையின் வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பின்னர் துணிகளை வாங்கிக் கொண்டு வெளியில் வந்து பார்த்தபோது, நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து மறுநாள் தாம்பரம் சண்முகம் சாலையில் நிறுத்தி வைத்திருந்த மேலும் ஒரு இருசக்கர வாகனம் காணாமல் போனது. தொடர்ந்து தாம்பரத்தில் அடுத்தடுத்து இரு சக்கர வாகனம் காணாமல் போனதால் சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தொடர்ந்து இருசக்கர வாகனத்தை திருடுவது ஒரே நபர்தான் என தெரிய வந்தது.
இந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பார்த்ததில், தனி ஒருவராய் கையில் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் தாங்கி தாங்கி நடந்தவாறு இரு சக்கர வாகனத்தில் அருகே வந்து கையில் இருக்கும் சாவியை கொண்டு இருசக்கர வாகனத்தை லாவகமாக ஓட்டி செல்வது தெரிய வந்தது.
இதையும் படிங்க: 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களே தயாரா..? பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..!
கொள்ளையனின் அங்க அடையாளங்களை வைத்து விசாரணை செய்தபோது, பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த நம்ம அப்பு (எ) அய்யனார் (29)
என தெரிய வந்தது. அதனை அடுத்து தாம்பரத்தில் இருந்து விரைந்த சென்ற தனிப்படை போலீசார் அய்யனாரை கைது செய்தனர்.
சிறைக்குள் நட்பு: தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, பாளையங்கோட்டை சிறையில் நான் இருக்கும் போது, திண்டிவனம் பகுதியை சேர்ந்த விஜய் (20) என்பவருடன் நட்பு ஏற்பட்டது என்றும் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவரிடம் தான் பல வருடங்களாக திருடிய இருசக்கர வாகனத்தை 3,000 ரூபாய்க்கு கொடுத்து விற்றுவிட்டேன் எனவும் தெரிவித்தார்.
அதன் பிறகு திண்டிவனம் பகுதிக்குச் சென்ற போலீசார் விஜயை கைது செய்து விசாரித்த போது, 3,000 ரூபாய்க்கு இரு சக்கர வாகனத்தை வாங்கி 5,000 முதல் 8,000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்தார்.
தொழிலாக மாறிய திருட்டு: அதன் பிறகு விஜயிடமிருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். இருவரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், 2016-ஆம் ஆண்டில் இருந்து அய்யனார் இருசக்கர வாகனத்தை திருட தொடங்கியதும், நாளடைவில் இருசக்கர வாகனம் திருட்டையே தொழிலாக மாற்றிக் கொண்டதும் அம்பலமானது.
மேலும், இருசக்க வாகனம் திருடுவதற்காக நான்கு மாஸ்டர் சாவிகளை செய்து, அந்த சாவியை மட்டும் பயன்படுத்தி கடந்த எட்டு வருடங்களாக இருசக்கர வாகனத்தை மட்டும் திருடி, 3,000 ரூபாய்க்கு விற்று அதில் வரும் பணத்தில் போதைக்காகவும், பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்காகவும் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், இவர் மீது பல்வேறு காவல் நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன.
அத்துடன் சில நாட்களுக்கு முன்பு பண்ருட்டி காவல் நிலையா எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனம் திருட்டு வழக்கில் போலீசாரிடம் சிக்கி தப்பித்து ஓடியபோது அய்யனாருக்கு கால் முடிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், வாக்கிங் ஸ்டிக் மூலம் நடந்து சென்று மீண்டும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்