திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளான கோனேரி குப்பம், உடையமுத்தூர், பொம்மிகுப்பம், தண்ணீர்பந்தல், மாடப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக செல்போன் டவர் கட்டுப்பாட்டு அறையில் இருந்த பேட்டரிகள் மற்றும் உதிரிபாகங்கள் தொடர்ந்து திருடு போய் கொண்டிருந்தது.
இது குறித்து திருப்பத்துார் கிராமிய காவல் நிலையத்தில் டவரை நிர்வாகிக்கும் நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து செல்போன் டவரில் உள்ள பேட்டரிகள் மற்றும் உதிரிபாகங்களை கொள்ளையடிக்கும் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர், வெங்களாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அந்நபரை காவல்துறையினர், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டபோது அவர், நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (வயது 34) என்பதும், மேலும் அவர் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து செல்போன் டவர்களில் உள்ள உதிரி பாகங்களை திருடி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தானேஷ் (34) என்பவரிடம் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதன் காரணமாக சந்திரசேகரன் மற்றும் தானேஷை திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரிகள் மற்றும் RRU எனப்படும் உதிரிபாகங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த விலை உயர்ந்த 5 செல்போன்கள் மற்றும் சொகுசு கார் முதலியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது! - nellai junction railway station