மதுரை: மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கனகவேல் (61) - கிருஷ்ணகுமாரி (56) தம்பதியினர். இவர்களது மகன் மணிகண்டன், மதுரையில் உள்ள செல்போன் பஜாரில் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். மணிகண்டனின் மனைவி நாகஜோதி (28). இவர்களுக்கு சிவ ஆத்மிகா (8) மற்றும் சிவஸ்ரீ (8) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் அனைவரும் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் பூமிதி திருவிழாவில் பங்கேற்று விட்டு, இன்று காலை மதுரைக்கு காரில் திரும்பியுள்ளனர். அப்போது, மணிகண்டன் விருதுநகரிலிருந்து மதுரை நோக்கி காரை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது, திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நிலையூர் பகுதியைச் சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி (35) தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டு, வலது புற சாலையிலன் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியின் மீது மோதி, தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரை ஓட்டி வந்த மணிகண்டன் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அதேபோல், மணிகண்டனின் மகள் சிவஸ்ரீ (8) படுகாயத்துடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
காரில் பயணம் செய்த மணிகண்டனின் தந்தை கனகவேல், தாய் கிருஷ்ண குமாரி, மனைவி நாகஜோதி, மகள் சிவ ஆத்மிகா மற்றும் கொய்யாப்பழ வியாபாரி பாண்டி உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவ ஸ்ரீ, சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார். சிவ ஸ்ரீ மற்றும் சிவ ஆத்மிகா இருவரும் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து நடைபெற்று ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சி வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே, சிகிச்சையில் இருந்த மற்றொரு சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் பழ வியபாரி கார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.