ஈரோடு: ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்க நகை 40 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை அடக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதே ஆண்டு அறச்சலூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டி சாமியாத்தாளை என்பவரைக் கொலை செய்து விட்டு மூதாட்டியிடம் இருந்து 1/4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
இதே போன்று 2021 ஆம் ஆண்டு (திருப்பூர் மாவட்டம்) காங்கேயம் பகுயில் இரண்டு வீடுகளில் 3 பேரை அடித்து கொலை செய்து விட்டு அவர்களிடம் இருந்து 18 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
அதேபோல், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. இதனையடுத்து 2020 முதல் 2023வரை நடைபெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளின் தடயங்களான, கைரேகை, சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல் ஆகியவற்றை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.
ஆனாலும் இந்த குற்ற சம்பவத்தில் எந்த தடயங்களும் கிடைக்காத காரணத்தால் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்படத் தொடங்கியது. மேலும் அதிகாரிகள் மாற்றம் தேர்தல் பணிகள் என பல்வேறு காரணங்களினால் இந்த ஆதாய கொலை வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
இதன் பின்னர் பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் கோகுலகிருஷ்ணன் நிலுவையில் உள்ள இந்த ஆதாய கொலை வழக்கினை தூசு தட்டி எடுத்து உள்ளார். இதற்கு முன்பாக ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் நடைபெற்ற ஆதாய கொலை சம்பவங்கள் தொடர்பான ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாய கொலை செய்ய கையாலும் முறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்த போது அதில் உள்ள சில ஆதாய கொலை சம்பவங்கள் நடைபெற்ற முறையும், சம்பவங்கள் நடைபெற்ற நாட்களும் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற ஆதாய கொலை சம்பவங்கள் நடைபெற்ற முறையும் ஒரே மாதிரியாக இருந்துள்ளது.
இதையும் படிங்க: கால் முறிந்தும் அடங்கல.. வாக்கிங் ஸ்டிக்குடன் பைக் திருட்டு.. கிடைத்த காசில் உல்லாசம்.. தாம்பரம் மக்களே உஷார்!
இந்த வழக்குகளில் இதனையே ஒரு மையமாக வைத்து விசாரணையைத் துரிதப்படுத்தினார் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன். இதற்காக தனிப்படை ஒன்றை அமைத்து தமிழகம் முழுவதும் குற்றவாளிகளை வலைவீசிய தேடிய வந்த நிலையில் 2020,2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆதாய கொலை சம்பவம் தொடர்பாக சில குற்றவாளிகளை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் போலீசாருக்கே உரித்தான பாணியில் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
நோட்டமிட்டு கொலை: இந்த ஆதாய கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இவர் பல்வேறு குழுவாக பிரிந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இதே போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. கொலை சம்பவத்தில் ஈடுபடும் முன்பு அந்த பகுதிகளுக்கு சென்று அம்மிக்கல் கொத்தும் வேலை செய்வது.
விவசாய பகுதியில் உள்ள வீடுகளில் பதுங்கி இருக்கும் கீரி, பாம்பு, காட்டுப்பூனை ஆகியவற்றைப் பிடிப்பது போல வீடுகளை நோட்டமிட்டுள்ளனர். பின்னர் விடியற்காலை 2 மணி முதல் 4 மணி வரையிலான நேரத்தில் கையில் கனமான இரும்பு ராடு மற்றும் ஆயுதங்களுடன் நோட்டமிட்ட வீட்டிற்கு உள்ளே சென்று அங்கே ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களை ஓரே அடியாக தலையில் அடித்து, வீடுகளில் உள்ள பணம் நகைகளைக் கொள்ளையடித்த சென்றது தெரிய வந்தது.
அதே போல் இந்த ஆதய கொலை வழக்கில் ஈடுபட்டவர்கள் சிலர் வேறு குற்றவழக்களில் சிறையில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், இந்த வழக்கு தொடர்பாக 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.