சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வைத்து 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் நூல் வெளியிட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெம்டும்டேவும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியாவின் தலைசிறந்த சட்டமேதை, இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தவர் என பன்முகங்களை கொண்டவர் அண்ணல் அம்பேத்கர். இந்த மகத்தான ஆளுமையின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான தொகுப்பான 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூலை பிரபல தமிழ் வார இதழும், voice of common என்ற நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த நூலை விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொகுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்? - திருமாவளவன் விளக்கம்!
மொத்தம் 36 ஆளுமைகளின் கட்டுரைகளாக தொகுக்கப் பெற்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூலை தவெக தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டார். இதனை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கரின் பேரனும், சமூகச் செயற்பாட்டாளருமான ஆனந்த் டெம்டும்டேவும் பெற்றுக் கொண்டனர். நடிகரும், தவெக தலைவருமான விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.
முன்னதாக, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதுமட்டுமின்றி அரங்கில் அமைத்திருந்த அம்பேத்கர் மெழுகு சிலையுடன் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். விழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் கேலரியையும் பார்வையிட்டார் விஜய்.