காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் 900-க்கும் மேற்பட்ட நாட்களாக போராடி வருகின்றனர். இந்த நிலையில், போராட்டக்காரர்களைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
சென்னை விமான நிலையத்திற்கு மாற்றாகக் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அறிவித்து, அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
ஆனால், பரந்தூர் பகுதியில் விமான நிலையம் வந்தால் விளைநிலங்களும், குடியிருப்புகளும், நீர்நிலைகளையும் அழிந்து போகும் என்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை அப்பகுதியினர் முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னதாக, பரந்தூர், தண்டலம், மகாதேவி, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்படவுள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 900 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வரும் சூழ்நிலையில், தற்போது தவெக தலைவரும், நடிகருமாக விஜய் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை இன்று நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
இதையும் படிங்க: பருவம் தவறிய மழையால் சேதமான பயிர்கள்.. மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை!
முன்னதாக, ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் மக்களையும், போராட்டக்குழுவினரையும் தவெக விஜய் சந்திப்பதாக இருந்த தெரிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் பொடவூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, மதியம் 12 முதல் 1 மணி வரை சந்திக்க உள்ளதாகவும், அப்போது பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து பேசவுள்ளதாகவும் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடு:
போராடும் கிராம மக்கள் மட்டுமே தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவர் விஜய் சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். திட்டமிட்டபடி மதியம் 12:30 மணிக்குள் நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும். பொது மக்களுக்கு பொது சொத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதித்து காவல்துறை அனுமதி வழங்கியது.
அதற்காக, பரந்தூர் வீனஸ் தனியார் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 135 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும், ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் ஆகிய மூன்று கிராமங்களில் இருந்து சுமார் 50 வாகனங்களில் 1,600 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.