தருமபுரி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம், தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன், "கட்சியில் புதியதாக இளைஞர்கள் ஆர்வத்துடன் இணைகின்றனர். தருமபுரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் பலர், குறிப்பாக சாதி, மத எல்லைகளைக் கடந்து எதிர்கால தமிழ் சமூகத்தின் வாழ்வுரிமைக்காக களமாடி வருகிறது" எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, 2024 தேர்தலின் கூட்டணி நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று பயணிக்கிறோம். பெரிய கட்சி கூட்டணியில் இடம் கொடுத்து அரவணைத்துச் செல்லக் கூடிய பொறுப்பும், கடமையும் அவர்களிடம்தான் உள்ளது.
சட்டமன்றத்தில் எனது குரல் ஒலிப்பது போல, நாடாளுமன்றத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குரல் ஒலிக்கும். அதற்காக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நாடாளுமன்றத்தில் தொகுதியை கேட்போம். அது தருமபுரியிலா, கடலூரிலா, கன்னியாகுமரியிலா, சேலத்திலா என்பதை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகதான் தீர்மானிக்கும்" என்று பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் இயங்கி வரும் மத்திய அரசுத்துறை அலுவலகங்களில், தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு குறைவாக வழங்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "மாநில அரசுப் பதவிகளில் 100 சதவீதம் தமிழகத்தை தாயகமாகக் கொண்ட தமிழர்களுக்காக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
மத்திய அரசுப் பதவிகளில் 90 சதவீதம் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் மத்திய அரசு பணிகளை, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 90 சதவீதம் வழங்க வேண்டும், மீதமுள்ள 10 சதவீதத்தை மற்ற மாநிலத்திற்கு வழங்க வேண்டும். இங்கு 90 சதவீதம் வேலை மற்ற மாநிலத்தவருக்கும், 10 சதவீதம் வேலை அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதனால் மற்ற மொழிக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன், பாஜக, தமிழக மக்களை மதத்தின் பெயரால் அணியாக திரட்டி, தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். அதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் வெளிப்பாடுதான் பிரதமர் அடிக்கடி தமிழகம் வருவது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: "தமிழக அரசு கள்-ளை உணவின் ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும்" - கள் இயக்கம் நல்லசாமி..!