தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 2020ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரை எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், 25 வயது இளைஞரை தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தற்போது, இந்த போக்சோ வழக்கு விசாரணைகள் அனைத்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், நேற்று (அக்.28) இவ்வழக்குகள் நீதிபதி மாதவ ராமானுஜம் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கு 4 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அதேபோல், மற்றொரு இளைஞருக்கு 20 வருடங்கள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், இவ்வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய எட்டையபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கலா, அப்போதைய தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் சங்கரகோமதி, காவலர் சிவன்ராஜ் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனை!