தேனி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில், தேனி நாடாளுமன்ற தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தேனி தொகுதியில் போட்டியிடும் தனது கணவர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக, அவரது மனைவி அனுராதா தினகரன், பெரியகுளம் நகராட்சி மற்றும் கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு, குக்கர் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “14 ஆண்டுகள் கழித்து மீண்டும் டிடிவி தினகரன் உங்களுக்காக பணி செய்ய வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். டிடிவி தினகரன், பொதுமக்களுக்காக ஏராளமான நலத்திட்டங்கள் செய்துள்ளார். அதுவும் உங்களுக்கு தெரியும். எனவே, குக்கர் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.
ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்த குக்கர் சின்னத்தின் பட்டன் தேய்ந்தது போன்று இந்த தேர்தலிலும் தேனி தொகுதியில், குக்கர் பட்டன் தேய்ந்துள்ளது என்று தேர்தல் அதிகாரிகள் கூற வேண்டும். அந்த அளவிற்கு அனைவரும் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அனுராதா தினகரனுக்கு, அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து, திலகம் இட்டும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் ஜாபர் சாதிக் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை - ED Raid In Jaffer Sadiq House