தேனி: பழனிசெட்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் கட்சி செயல்பாடு குறித்தும், கட்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "தேனி மாவட்டத்தில் வீடு எடுத்து தங்க வேண்டும் என்று எனக்கு பல ஆண்டுகள் ஆசை. அதற்காக வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தேனியில் போட்டியிடுவேன் எனக் கூறுவது தவறு. ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, போடியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல் தவறானது. நான் இன்னும் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவெடுக்கவில்லை.
அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் தேனியில் போட்டியிடவில்லை, நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே போட்டியிட்டேன், ஆனால் பணநாயகத்தை ஜனநாயகத்தால் வெல்ல முடியவில்லை. இனிவரும் தேர்தலில் எங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பாஜக, அதிமுகவை அழிக்கப் பார்க்கிறது என்பதெல்லாம் பொய். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் என் பின்னே அணி திரள்வார்கள் என்றுதான் அண்ணாமலை கூறினார். எடப்பாடி பழனிசாமி என்ற சுயநலவாதி, பதவி வெறியர், துரோக சிந்தனை கொண்டவர்தான் அதிமுக ஒன்றிணைய தடைக்கல்லாக இருக்கிறார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற ஆசையில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். விரைவில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" எனக் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பெண்ணிடம் 25 பவுன் நகையை ஏமாற்றிய காவலர்.. தேனி ஆட்சியர் அலுலகத்தில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு! - Theni