தேனி: நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பிடித்தார். இந்நிலையில், தேர்தலில் தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்றது.
இதில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அமமுக முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
பின்னர், நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பேசியதாவது, “தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் போதை, கஞ்சா பழக்கங்களைப் போன்று தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறும் கலாச்சாரம் பரவி வருகிறது. வேட்பாளர்கள் வெற்றி பெற ஓட்டுக்கு 500, 1,000 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்ற பின் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தங்கள் முதலீடு செய்த பணத்தை அறுவடை செய்யும் வேலை செய்து வருகின்றனர்.
தேர்தலில், திமுக வெற்றி பெற்றால் தேனி தொகுதியில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து தங்குவேன் என்று உதயநிதி கூறினார். தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள் ஆகிறது இன்னும் வரவில்லை. இந்தப் பகுதி மக்களுக்கு உழைக்க வேண்டும் என்பதற்காகவே தேனியில் வீடு எடுத்து தங்கி உள்ளேன். தேனி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். தீய சக்தி திமுகவை வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அவர்களுக்கு தோல்வியை பரிசாக கொடுக்க வேண்டும்.
கலைஞர் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் வரவேண்டும் என தவமிருந்து, அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்தனர். மத்திய அரசிடமும், பாஜக தலைமையிடமும் திமுக அரசு மண்டியிட்டு இருக்கின்றது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் திமுக எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. கல்வி செல்வம் தான் யாராலும் அழிக்க முடியாத செல்வம், அதை மாணவர்கள் படித்து உயர வேண்டும் என கூறிவிட்டு, பள்ளிகளில் புத்தகத்தின் விலையை உயர்த்தி விட்டனர்.
எங்கு கஞ்சா, போதை பொருள் பிடிபட்டாலும் அதற்கு திமுக நிர்வாகிகள் தொடர்பு இருப்பது தொடர்ந்து வருகிறது. திமுக குடும்பத்தின் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக, அவர்கள் மத்திய அரசிடம் மண்டியிட்டுள்ளனர்.வரும் தேர்தலில், ஊழலில் பெற்ற பணத்தை எவ்வளவு கொடுத்தாலும் திமுகவால் வெற்றிபெற முடியாது.
அதிமுக பற்றி பேச வேண்டாம் என நினைக்கிறேன். அந்தக் கட்சியை எடப்பாடி பழனிச்சாமியே இழுத்து மூடி விடுவார். எடப்பாடி பழனிச்சாமியின் பதவி வெறியால், பணத்திமிரால் இன்று தலை கால் புரியாமல் நடந்து வருகிறார். பத்து தோல்விகளை சந்தித்தும் திருந்தவில்லை என்றால் அவரை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. பழனிச்சாமி வீட்டில் அமர்ந்து கொண்டு பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், இங்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலினுடன், எடப்பாடி பழனிச்சாமி மறைமுக கூட்டணி வைத்துள்ளார். ஆனால், தொலைக்காட்சிகளில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவார்கள். திமுக குடும்பத்தினர் சினிமாவில் இருந்து வந்தவர்கள். ஆனால் அவர்களையே மிஞ்சும் அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி நடிகராக இருக்கின்றார்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பள்ளிக்காக அளிக்கப்பட்ட நிலத்தை வேறு காரியங்களுக்கு பயன்படுத்த முடியாது - வீட்டு வசதி வாரியத்திற்கு ஐகோர்ட் உததரவு!