திருச்சி: நாம் தமிழர் கட்சியினருடன் சமீபத்தில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகளால் தமிழ்நாடு முழுவதும் கவனம் பெற்ற போலீஸ் அதிகாரியாக இருப்பவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்.
இவர், திருச்சியில் பதவியேற்ற நாளில் இருந்து இன்று வரை ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் என சட்டவிரோத செயல்களுக்கு எதிராகவும், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டோருக்கு உரிய தீர்வினை வழங்கி வருகிறார்.
இத்தகைய சூழலில், சிறப்பாகவும் துணிச்சலாகவும் பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 'அண்ணா பதக்கம்' வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்த வருடம் 'அண்ணா பதக்கம்' பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களில் வருண்குமாரும் ஒருவராவார்.
இந்த நிலையில், விஜயின் துப்பாக்கி படத்தின் பாணியில், 'ஐ ஆம் வெயிட்டிங்' என்ற வசனத்துடன், காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், தனது மொபைல் போனில், கையில் லத்தியுடன் நிற்பது போல, வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: சூட்கேஸில் துண்டு துண்டான நிலையில் இளம்பெண் உடல்.. சிவகங்கை நபர் கைது.. அதிர்ச்சியூட்டும் பின்னணி!
மேலும் அதில், குற்றங்களை பட்டியலிட்டு புகார் தெரிவிக்க விரும்பினால், என்னை 9487464651 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் பதிவிட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் இந்த பதிவு, சமூக விரோதிகளைக் கதி கலங்க வைத்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீசாக இருந்த விஜயகுமார் மற்றும் மண்ணச்சநல்லுார் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீசாக இருந்த வினோத் ஆகிய இருவரும் அந்த பகுதியில் நடக்கும் சட்ட விரோத லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இருவரையும் நேற்று முன்தினம் (செப்.17) இரவு, ஆயுதப்படைக்கு மாற்றி, காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டார்.
இதுமட்டும் அல்லாது, திருச்சி மாவட்ட எல்லைக்குள் நடைபெறும் கஞ்சா, லாட்டரி, கள்ள மது விற்பனை, பொது மக்களுக்கு இடையூறாக வாகனத்தில் வீலிங் செய்து அலப்பறையில் ஈடுபடும் இளைஞர்கள், கட்டப்பஞ்சாயத்து, ஏமாற்றுதல், மறைமுக மிரட்டலில் எடுப்பவர்கள் மீது காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உரிய விசாரணை நடத்தி நியாயமான முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.