சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டுக்குச் சொந்தமான யூடியூப் நிறுவனத்தில் சுமார் 3 மணி நேரம் சோதனையிட்ட திருச்சி காவல்துறையினர், 4 கேமரா, கணினி ஹார்ட் டிஸ்க் உட்பட 29 பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்வாறு காவல்துறை சோதனையை முடித்தபின், சோதனை தொடர்பாக பெலிக்ஸ் மனைவி ஜேன் பெலிக்சிடம் போலீசார் கையெழுத்து பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பெலிக்ஸ் மனைவி ஜேன் பெலிக்ஸ்,
காவல்துறை சோதனை நடத்துவதை ஒரு பெண்ணாக தனியாக எதிர்கொள்வது நெருக்கடியாக உள்ளதாகவும், தானும், தன் மகனும் நிம்மதியின்றி உள்ளதாகவும் கூறினார்.
மேலும், யூடியூப் சேனலானது பெலிக்ஸ் நேர்மையாக உழைத்து சம்பாதித்த சொத்து எனவும், தற்போது பொருட்கள் பறிமுதல் செய்துவிட்டதால் எதைக் கொண்டு நிறுவனத்தை நடத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த பெலிக்ஸ் வழக்கறிஞர் ஜான்சன், வழக்கிற்கு சம்பந்தமான பொருட்களை மட்டுமே பறிமுதல் செய்ய வேண்டும் என நீதிமன்ற ஆணையில் உள்ள போது, ஒட்டுமொத்த தனியார் யூடியூப் நிறுவனத்தையும் முடக்கும் விதத்தில் காவல்துறை செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர். மேலும் இது ஊடக சுதந்திரத்துக்கு விடப்பட்ட சவாலாக பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: “என் வீட்ல எதையாச்சும் வச்சுட்டு போய்டிங்கனா...” - ரெய்டுக்கு வந்த போலீசாரிடம் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி வாக்குவாதம்!