திருச்சி: திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. இதில் கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய 5 கோட்டங்கள் உள்ளன. இந்த 5 கோட்டங்களிலும் சுமார் 2.35 லட்சம் வீடுகள் மற்றும் பல்வகை வணிக நிறுவனங்கள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த திருச்சி மாநகரில், சராசரியாக ஒரு நாளைக்கு 400 டன் முதல் 420 டன் வரை குப்பைகள் சேர்வதாக மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகள் நுண் உரம் செயலாக்க மையங்களில் உரமாக மாற்றப்படுகிறது.
தீபாவளிக் கொண்டாட்டத்தில் குவிந்த குப்பைகள்: இதனிடையே, தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் முக்கிய கடை வீதிகளில் தற்காலிக கடைகள் மற்றும் தரைக்கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் இருந்து வீசப்பட்ட பாலித்தீன் உறைகள், பாலித்தீன் பைகள், காகிதங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை நாளில் வீசப்பட்ட பட்டாசு மற்றும் இனிப்பு காலிப் பெட்டிகள், வெடி காகிதங்கள், வாழை இலைகள், சாலையோர உணவுக் கடைகளில் இருந்து கொட்டப்பட்ட உணவுக் கழிவுகள் என, இன்று மாநகரில் வழக்கத்தை விட சுமார் 120 டன் குப்பை கூடுதலாக குவிந்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குப்பை பிரச்னைக்கு விரைவில் தீர்வு? AI கேமராக்களை களமிறக்கும் சென்னை மாநகராட்சி!
பொதுவாக தீபாவளி பண்டிகை நாளில் கோட்டம் தோறும் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 5 டன் குப்பை வரப்பெறும். இந்த ஆண்டு பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, பர்மா பஜார், என்எஸ்பி சாலை, மேலரண் சாலை உள்ளிட்ட கடை வீதிகள் கொண்ட ஸ்ரீரங்கம் கோட்டத்தில் இருந்து வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 10 டன் குப்பை வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று (அக்.1) இரவு முதல் கடை வீதிகளில் வீசப்பட்டிருந்த குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆயிரம் பேரும், ஒப்பந்த தொழிலாளர்கள் 1,050 பேரும் என மொத்தமாக 2,050 பேர் குப்பைகளை சேகரித்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.