மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கம் மற்றும் பாஜக அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி சிவா எம்.பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அதில் அவர் பேசியதாவது,"வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்பது, எப்போதும் போல வந்து போகின்ற தேர்தல் இல்லை. இந்த தேர்தலின் முடிவுதான் அடுத்து யார் ஆட்சியில் அமரப் போகிறார் என்பதை தீர்மானிக்கப் போவது அல்ல. இந்த நாடு ஜனநாயக நாடாகத் தொடர்ந்து இருக்கப் போகிறதா, இல்லையா என்பதை பற்றிய தேர்தல்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக ஆட்சி தழைக்குமா அல்லது ஒற்றை அதிபர் ஆட்சி முறை வருமா எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்பது மிகவும் அபாயகரமானது. இந்த சட்டத்தின்படி சுற்றியுள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் இந்தியாவில் குடியேறலாம். அவர்களுக்கு இந்திய நாடு குடியுரிமை தரும் எனத் தெரிவித்தார்கள்.
ஆனால், இதில் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை இல்லை. மற்றவர்களுக்குக் குடியுரிமை உண்டு எனச் சொன்னார்கள். சட்ட மசோதா குறித்த விவாதத்தின்போது இஸ்லாமியர்களைச் சேர்க்க வேண்டும், இலங்கையச் சேர்ந்த தமிழர்களைச் சேர்க்க வேண்டும், அதேபோல் இனம் சார்ந்துள்ள அனைவரையும் சேர்க்க வேண்டும் என திமுக வலியுறுத்தியது.
இச்சட்டம் தொடர்பான வாக்கெடுப்பின்போது அதிமுக எம்பிக்கள் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அச்சட்டம் நிறைவேறியது. ஆனால், இன்று இஸ்லாமிய மக்களுக்காக குரல் கொடுப்போம் எனப் பேசி வருகிறார்கள். இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சட்டத்தில் வாக்களித்த அதிமுக, இனி தமிழகத்தில் தலை தூக்கக்கூடாது எனப் பேசினார். அதேபோல், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு வந்து, சிறுபான்மையினரை அச்சுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, ஏற்கனவே உள்ள பயங்கரவாத சட்டத்தின்படி பயங்கரவாத செயலில் ஈடுபடுபவர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள்தான் குற்றவாளிகள் என விசாரணையின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய சட்டத்திருத்தத்தின் படி, எந்த ஒரு தனி நபரையும் பயங்கரவாதி என சிறையில் அடைக்க முடியும்.
அவர்களால் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருந்து வெளியே வர முடியாது. இது முற்றிலும் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு சட்டமாகும். இதனையும் ஆதரித்து அதிமுக வாக்களித்துள்ளது. எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று பேசினார்.
இதையும் படிங்க: தேனியில் டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து; ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படாததால் நேர்ந்த விபரீதம்!