திருச்சி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் திருச்சியில் வெற்றி வாகை சூட போகும் வேட்பாளர் யார் என்று எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் எழுந்திருக்கிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சி ஒரு திருப்பு முனையாகவே இருந்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் திருச்சியை தலைநகராக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு தொழில், ஆன்மீகம், சுற்றுலா என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நகரம் தான் திருச்சி. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறு பாயும் கரையோரம் விவசாயமும் நன்கு செழித்து குடிநீருக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இதனால் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பு பெற்ற நகரமாகவே திருச்சி இருந்திருக்கிறது.
இவ்வளவு சிறப்பு பெற்ற திருச்சி நகரத்தில் இதுவரைக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கின்றனர். கடந்த முறை வெற்றி பெற்ற திருநாவுக்கரசர் தொடங்கி தற்போது நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் வரை அனைவருமே வெளியூர்களை சேர்ந்தவர்கள் தான். இம்முறை பாஜக அதிமுக தனித்து போட்டியிடுவதும், வாக்கு வங்கிகள் தனித் தனியாக பிரிந்திருப்பதும் திருச்சி தொகுதி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் மதிமுகவில் முதன்மை செயலாளர் துரை வைகோ, அதிமுக கூட்டணி சார்பில் கருப்பையா, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் மாபெரும் வெற்றி பெற்றார்.
துரை வைகோ வெல்வாரா?: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தங்களுக்கு கிடைத்த ஒரு தொகுதியை தக்க வைக்க மதிமுக கடுமையாக போராடுகிறது. தற்போதைய சூழலில் ஆரம்பத்தில் இருந்து திருச்சியை சேர்ந்த இரு அமைச்சர்களான கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் சிறப்பாக களப்பணி ஆற்றி வருகின்றனர். இதன் காரணமாக வெற்றியை பெற்று விடலாம் எனச் சொல்கின்றனர்.
அதே நேரத்தில், துரை வைகோவின் உணர்ச்சி மிகுந்த பேச்சுக்கள் கூட்டணிக்குள் சற்றே மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறினாலும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் களப்பணியாற்றி வெற்றியை ஈட்ட வேண்டும் என அமைச்சர்கள் கூட்டணி கட்சியினருக்கு உத்தரவிட்டு அதனை நோக்கி பயணிப்பதாக சொல்கின்றனர்.மேலும், துரை வைகோ தொகுதியை சேர்ந்தவரே இல்லை என மற்ற கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் வலுவான கருத்தை முன் வைத்து வருகின்றனர். ஆனால் அது வெற்றியை பாதிக்கும் என சொல்வதற்கில்லை.
திருச்சியில் அதிமுகவின் நிலை என்ன?: அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவோடு கந்தர்வகோட்டையை சேர்ந்த கருப்பையா போட்டிருக்கிறார். பல்வேறு விஷயங்களை முன் வைத்து இவரது பிரச்சார யுக்தி இருக்கிறது. திருச்சியில் சர்வதேச விமான நிலையம் மேம்படுத்தப்படும், முந்திரி ஏற்றுமதி அதிகரிக்க நடவடிக்கை, காவேரி குண்டாறு திட்டம் உள்ளிட்டவைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முன்னாள் எம்பி குமாரின் ஆதரவும் இருக்கிறது.
தற்போது பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதால் அவரது ஆதரவாளர்கள் வாக்குகள் அதிமுகவுக்கு செல்லாமல் பாஜக கூட்டணிக்கு வாக்கு அளிக்க வாய்ப்பு உள்ளது. இது ஒரு வகையில் அதிமுகவுக்கு ஒரு சில இடங்களில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறுகின்றனர்.
அமமுக-வின் வாய்ப்புகள் என்ன?: அமமுகவினர் பாஜக கூட்டணியில் இருப்பதால் பாஜகவினர் வாக்குகள் செந்தில்நாதனுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கடந்த 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்ற நிலையில் இந்த முறை கூட்டணி காரணமாக தங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறது.
நாம் தமிழர் கட்சி நிலைபாடு: நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை இளைஞர்களிடையே பிரபலமான ஜல்லிக்கட்டு ஆர்வலர் ராஜேஷ் களம் இறங்குகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜாதி, மதம், பாகுபாடு இன்றி இளைஞர்களை திரட்டி மிக பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தியவர். அதுமட்டுமல்லாமல் தற்போது பொங்கல் பண்டிகை விழா காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வது என கிராமப்புற இளைஞர்களிடையே இவருக்கு வரவேற்பு இருக்கிறது.
மேலும், படித்த இளைஞர்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு இருப்பதால் ஓரளவு நெருக்கடி கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி வாக்குகளை பெறும் என்கின்றனர் திருச்சி தொகுதி மக்கள். ஆனால் கள நிலவரம் திமுக கூட்டணி- அதிமுக கூட்டணி- பாஜக கூட்டணியையே சுற்றியிருக்கிறது.