திருச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த நிலையில் காவல்துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் மது விலக்கு அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் நேற்று ஜூன் 21 தேதி இரவு பச்சை மலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 250 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரலை கண்டுப்பிடித்து, கீழே ஊற்றி அழித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த பகுதி மக்களை அழைத்து கள்ளச்சாரயத்தின் தீமைகளை எடுத்து கூறிப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கிராமத்தைச் சேர்ந்த அனைவரையும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது, அதனை அனுமதிக்க மாட்டோம், என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் ஏராளமான காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ”மாவட்ட எஸ்.பி யின் கண்காணிப்பு குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் பச்சை மலை ஓடை அருகே சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை அழித்துள்ளோம். பச்சை மலையில் துக்க நிகழ்வுகளுக்கு இது போன்ற செயலில் சிலர் ஈடுபடுவது வழக்கமாக வைத்துள்ளனர். இனி திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஊறல் இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்”என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கள்ளு' கடை திறக்கக்கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்.. போலீஸ் முன்பே தற்கொலைக்கு முயன்ற விவசாயியால் பதற்றம்!