திருவாரூர்: நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட எட கீழையூர் வடக்கு உடையார் தெரு பகுதியில் சுமார் 35 குடும்பங்களை சேர்ந்த இருளர் பழங்குடியின மக்கள் 50 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு இருளர் இன சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என மனு கொடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
அவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளி சீருடையுடன் அழைத்து வந்து, குடும்ப அட்டை. ஆதார் அட்டை. வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இருளர் இனத்தைச் சேர்ந்த தங்களுக்கு அம்பலக்காரர் என்கிற சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதே சாதி சான்றிதழ் தான் தங்களது குழந்தைகளுக்கும் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் கூறுவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், தங்களுக்கு இருளர் பழங்குடியின சாதி சான்றிதழ் வேண்டுமெனவும், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வலங்கைமானை சேர்ந்த ஒருவருக்கு இருளர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தாங்கள் கேட்டால் திருவாரூர் மாவட்டத்தில் இருளர் இனமே கிடையாது என்று அதிகாரிகள் பதில் கூறுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதில், ஒரு குடும்பத்தில் கணவனுக்கு அம்பலக்காரர் என்கிற சாதி சான்றிதழும் மனைவிக்கு இருளர் என்கிற சாதி சான்றிதழும் இருப்பதாக கூறப்படுகிறது. கடலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள தங்களது உறவினர்களுக்கு இருளர் சாதி சான்றிதழ் வழங்கப்படுவதாகவும் தங்களுக்கு அம்பலக்காரர் என வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்காக கடந்த 25 வருடங்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருப்பதாகவும் தங்களது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு கடந்த இரண்டு வருடமாக போராடிக் கொண்டிருப்பதாகவும் இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் எங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் இதனால் பாதிக்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலின்போது ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை ஒப்படைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்ததாக கூறும் அவர்கள், தேர்தல் முடிந்ததும் இந்த பிரச்சனையை சரி செய்வதாக அதிகாரிகள் சொன்ன வார்த்தையை நம்பி தாங்கள் கலைந்து சென்றதாகவும் கூறுகின்றனர். ஆனால் இன்று தங்கள் பகுதியைச் சேர்ந்த அத்தனை மாணவ மாணவிகளுடன் இங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்த அவர்கள், சாதி சான்றிதழ் கொடுக்கும் வரை இங்கிருந்து போகப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மானவர்களின் அம்மாவிற்கு உள்ள இருளர் சாதி சான்றிதழை வைத்து ஆன்லைனில் சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்படியும், அதனடிப்படையில் இருளர் சாதி சான்றிதழ் உங்களுக்கு வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.