கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைகட்டி என்பது மலைப் பகுதியாகும். இப்பகுதியில் மலைவாழ் மக்கள், பழங்குடியின மக்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆனைகட்டியில் உள்ள தனியார் மதுபானக் கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கூடத்தை அகற்றக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் முருகவேலு, "கடந்த 2019ஆம் ஆண்டு நாங்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு ஆனைகட்டியில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. அந்த நேரத்தில் மாவட்ட நிர்வாகத்தினர், 23 கிலோமீட்டர் அப்பால் தான் இந்த கடை நிறுவப்படும் என்று உறுதியளித்தனர்.
இந்நிலையில், தற்போது ஆனைகட்டி பகுதியில் தனியார் கிளப் துவங்கப்பட்டுள்ளது. அங்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களை அருந்தி, கடந்த மூன்று மாதங்களில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். பழங்குடியின மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற மத்திய அரசின் வழிகாட்டுதலில் உள்ளது.
அதன் பேரில் எங்கள் பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றித் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், எங்கள் சமூகத்தினரை மது பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களது நிலங்களை அபகரிக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு அளித்து, பழங்குடியின மக்களின் நிலங்களை வாங்கவோ, விற்கவோ கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, எங்கள் பகுதியில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில், பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை எனவும், நியாயவிலைக் கடைகளில் தற்போது வழங்கப்படும் பொருட்களால் எங்கள் சமூகத்தினர் பலர் உடல் ரீதியான பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்றார்.
தொடர்ந்து நான்காண்டுகளாக இந்த பிரச்னைகள் குறித்து மனு அளித்து வருவதாகவும், ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை என குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் சமூகத்தினை பாதுகாக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தயாநிதி மாறனுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு சென்னை குற்றப்பிரிவுக்கு மாற்றம் - Dayanidhi Maran Case