சென்னை: தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள், பொதுமக்களிடம் சரியான முறையில் சென்று சேர்ந்துள்ளதா என உறுதி செய்யும் வகையில், பொதுமக்களை தொலைபேசி மூலம் தொடர்ப்பு கொள்ளும் ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 6) தொடங்கி வைத்தார்.
அதன்படி, அமைச்சர்கள், அதிகாரிகள், தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களை தொடர்பு கொண்டு, அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்தனர். இவ்வாறு 'நீங்கள் நலமா திட்டம்' தொடங்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "நாங்க நலமா இல்லை" எனக் குறிப்பிட்டு, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது 'நாங்க நலமா இல்லை ஸ்டாலின்' எனும் ஹேஷ்டேக் வலைதளத்தில் ட்ரெண்டாகியது.
எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “நீங்கள் நலமா என்று கேட்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு, சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு, விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு. எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு. இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை” என தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “ எதிர்கட்சித் தலைவர், தான் நலமாக இல்லை என்று முதலமைச்சருக்கு முறையிட்டிருக்கிறார். விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டுக் கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
பதவியைக் காப்பாற்றுவதற்காக பா.ஜ.க.வுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? தூத்துக்குடியில் மக்களை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளி ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? பொள்ளாச்சி இளம்பெண்களை சீரழித்த கொடூரன்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான CAA-க்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? கரோனாவில் ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்த ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? உங்களின் இருண்ட ஆட்சியிலிருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் இன்றும் என்றும் நலமாகவே இருப்பார்கள், திராவிட மாடல் ஆட்சியில்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமி கொலை; உடலை பெற்ற பெற்றோர்.. நிவாரணம் அறிவித்த அரசு - வலுக்கும் போராட்டம்!