சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் வெளிவட்ட சாலையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்காக ஐந்து ஏக்கர் பரப்பளவில் சுமார் 27 கோடி ரூபாய் செலவில் 120 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வகையில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு தளங்களாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்காக உணவகம், தங்கும் அறைகள், கழிப்பிடம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அங்கு நடைபெற்று வரும் பணிகளைச் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் சேகர்பாபு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டனர். மேலும் கட்டமைப்பு குறித்துக் கேட்டறிந்த அவர்கள் விரைவில் பணிகளை முடிக்குமாறு உத்தரவிட்டனர். இதை அடுத்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாகப் பேசிய அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், "கடந்த இரண்டு நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். குறித்து எதிர்க்கட்சி தலைவரும் இன்னும் சில தலைவர்களும் தேவையற்ற வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையமாக இருந்தாலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமாக இருந்தாலும் இரவு 11.30 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுவது மிக மிக குறைவாகத்தான் இருக்கும்.
திருச்சி வரை மட்டும் தான் இரவில் பேருந்துகள் இயக்கப்படும். ஏனென்றால், நீண்ட தூரம் செல்பவர்கள் 12 மணி முதல் 4 மணி வரை பேருந்துகளில் செல்வது பாதுகாப்பானது அல்ல என்பதால் இரவு நேரப் பயணம் தவிர்க்கப்படுவது, கால காலமாக இருந்து வரும் நடைமுறை. ஆனால் திடீரென, 12 மணிக்கு மேல் 700க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தில் குவிந்து பிரச்சனை ஏற்படுத்துவது ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிகிறது.
சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், மீண்டும் கோயம்பேடு பேருந்து நிலையம் இயங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாகத் தேவையின்றி பிரச்சினை ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கூடுதலாக 150 பேருந்துகளும் நேற்று இரவு 600 பேருந்துகளும் இயக்கப்பட்டன.
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்தம் வரும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் நிறைவடையவுள்ள இந்த இடைக்கால நேரத்தில், ஒரு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது, தேவையற்ற பேட்டி அளிப்பது என்பது கண்டனத்திற்குரியது" என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இதையும் அப்டிங்க: பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் சர்ச்சை; காலாவதியானதை இருப்பு வைப்பதில்லை.. அறங்காவலர் குழு தலைவர் விளக்கம்!