தஞ்சாவூர்: சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த தொழிலதிபர் நந்தகுமார் (45) என்பவர், சொந்த வேலையாக தனது ஊரான புதுக்கோட்டை அருகே பத்துதாக்கு பகுதிக்குச் சென்றுள்ளார். பின் மீண்டும் சென்னைக்கு தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக கடந்த அக்டோபர் 18ஆம் தேதி இரவு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தஞ்சாவூர் அருகே வளப்பகுடி பகுதியில் இயற்கை உபாதைக்காக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய போது, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு திருநங்கை, அவரிடம் சாப்பிட பணம் கேட்டு உள்ளார். இதையடுத்து, நந்தகுமார் தனது பையில் வைத்திருந்த பணத்திலிருந்து 300 ரூபாயை எடுத்துக் கொடுத்துள்ளார். பையில் மேலும் பணம் இருந்ததைப் பார்த்த அந்த திருநங்கை, சத்தம் போட்டு, தூரத்தில் நின்று கொண்டிருந்த 3 திருநங்கைகளை அழைத்துள்ளார்.
இதையும் படிங்க: அரசுப் பேருந்தின் ஜன்னல் கம்பி அறுந்து உடலில் குத்தியதில் கல்லூரி மாணவர் பலி.. ஈரோடு அருகே நடந்தது என்ன?
அவர்கள் ஒன்றாக சேர்ந்து நந்தகுமாரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்தது மட்டுமல்லாமல், அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நந்தகுமார், அருகில் இருந்த செங்கிப்பட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றிக்கொண்டு இருந்த 4 திருநங்கைகளைப் பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில், அவர்கள் தேனியைச் சேர்ந்த சுபஸ்ரீ (25), ஈரோடு ரபியா (29), திருவையாறு மயூரி (28), அரியலூர் தேவயானி (37) என்பதும், அவர்கள் 4 பேரும் சேர்ந்து நந்தகுமாரிடம் பணம் மற்றும் நகையைப் பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகையைப் பறிமுதல் செய்த செங்கிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சிசாரா மற்றும் போலீசார், திருநங்கைகள் 4 பேரையும் கைது செய்து திருச்சி பெண்கள் கிளைச் சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்