சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் இருந்த திருநங்கை ஒருவர், வடமாநில இளைஞர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அந்த இளைஞர்கள் திருநங்கையிடம் பணம் இல்லை என கூறியுள்ளனர்.
அதற்கு அந்த திருநங்கை அவர்களை கையால் அடித்தும், தலையில் தட்டியும் அவர்களிடம் உள்ள செல்போன், ஹெட்செட் உள்ளிட்ட பொருட்களை பிடுங்கிக்கொண்டு சென்றுள்ளார். மேலும், அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி ரயிலில் இருந்த அனைவரையும் திட்டி உள்ளார்.
இந்நிலையில், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இதுபோன்று அராஜகத்தில் ஈடுபட்டு வரும் திருநங்கைகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென ரயிலில் பயணித்த சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், ரயிலில் வட மாநிலத் தொழிலாளர்களை துன்புறுத்தியவர் துறைமுகம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாதவி (38) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தாம்பரம் ரயில்வே போலீசார் திருநங்கையை கைது செய்து, அவர் மீது ரயில் பயணிகளை அச்சுறுத்துதல், பயணிகளிடமிருந்து பொருட்களை அடித்து எடுத்துக் கொள்ளுதல், தகாத வார்த்தையால் திட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது கொலை வெறி தாக்குதல்; சிறுவன் உட்பட 4 பேர் மீது வழக்கு! - Mentally challenged person attacked