நீலகிரி: குன்னூர் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்தின்போது, உதகை ரயில் நிலையம் அருகே உள்ள பெர்ன்ஹில் பகுதியில் வளர்ப்பு எருமை ஒன்று திடீரென தண்டவாளத்தின் குறுக்கே வந்ததால், மலை ரயில் இன்ஜின் ஓட்டுநர் பிரேக் அழுத்தியதில் மலை ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம் புரண்டது.
எதிர்பாராதவிதமாக நேர்ந்த இந்த விபத்தில் மலை ரயிலில் பயணம் செய்த 220 பயணிகளும் எந்த வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் காயமடைந்த வளர்ப்பு எருமை பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து இந்த விபத்தால் சேதமடைந்த தண்டவாளம் மற்றும் ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சீரமைக்கும் பணி காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் உதகை குன்னூர் இடையிலான போக்குவரத்தும், மேட்டுப்பாளையம் உதகை இடையிலான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
விபத்து காரணமாக ஐந்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள ஆர்வமுடன் வந்த சுற்றுலாப் பயணிகள், உதகை ரயில் நிலையத்திலிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இரவு பகலாக பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், விரைவில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து, வழக்கம் போல் ரயில் போக்குவரத்து துவங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நீலகிரி மலை ரயில் தடம் புரண்டு விபத்து.. காரணம் என்ன?