சென்னை: புதுச்சேரியில் இருந்து சென்னை (கிளாம்பாக்கம்) நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள திருச்சி - சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக எந்த வாகனங்களையும் நிறுத்தக்கூடாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்திற்கு வண்டலூர் போக்குவரத்து காவலர்கள் ரூ.1,000 அபராதம் விதித்தனர்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், நேற்றிரவு முதல் தற்போது வரை நோ பார்க்கிங் நிறுத்தப்பட்டதாகவும், நிர்ணயிக்கப்பட்டதை விட வேகமாகச் சென்றதாகவும் கூறி பல்வேறு இடங்களில் சுமார் 22 அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, நேற்று (புதன்கிழமை) திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் ஒருவர், பயணச்சீட்டு எடுக்க மறுப்பு தெரிவித்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது.
மேலும், காவல்துறையினர் முறையான வாரண்ட் வைத்திருந்தால் மட்டுமே அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்க முடியும் எனவும், இல்லாதபட்சத்தில் கட்டாயம் பயணச்சீட்டு எடுத்து தான் பயணிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அரசுப் போக்குவரத்து பேருந்துகள் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “அடுத்த தலைமுறை சரியில்லை எனக் கூறுவதில் நம்பிக்கை இல்லை” - கங்காபுர்வாலா பேச்சு!