வேலூர்: தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டுவரும் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளால் தமிழக போக்குவரத்து துறைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுவதாகக் கூறி, வெளிமாநில பேருந்துகளை, தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகளாக மாற்ற வேண்டும் என உத்தரவிட்டு தமிழக போக்குவரத்து துறை சார்பாக 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது இந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்க தடை என கடந்த ஜூன் 12 ஆம் தேதி போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக, தமிழ்நாட்டில் வெளிமாநில மற்றும் ஆம்னி பேருந்துகள் உரிய ஆவணங்களுடன் இயக்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில், வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் உள்ளிட்ட போலீசார், வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக புதுச்சேரி பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து வந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில், ஆம்னி பேருந்தை நிறுத்திய போலீசார் சோதனை செய்தனர்.
அதில், அந்த பேருந்து அனுமதிக்கு புறம்பாகவும், உரிய ஆவணங்கள் இன்றியும் இயக்கி வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த பேருந்தில் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் வரை 30 பேர் பயணம் செய்வதும் தெரியவந்தது. இதனையடுத்து புதுச்சேரி பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதில் பயணம் செய்த 30 பேரை தமிழக அரசு விரைவுப் பேருந்து மூலம் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல, தொடர்ந்து அனுமதிக்கு புறம்பாகவும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட மேலும் இரண்டு ஆம்னி பேருந்துகள் என மொத்தம் 3 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்து சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, இதுபோன்று அனுமதிக்கு புறம்பாகவும், உரிய ஆவணங்கள் இன்றியும் பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.