சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக, ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காரம்பாக்கம், செட்டியார் அகரம், வானகரம், அடையாளம்பட்டு, அயப்பாக்கம் ஆகிய பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுடன், நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களின் அணிவகுப்புடன் அவர் பிரச்சாரம் செய்தார். அவருடன் மதுரவாயல் திமுக எம்.எல்.ஏ காரம்பாக்கம் க.கணபதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அப்போது பிரச்சாரத்தின்போது பேசிய டி.ஆர்.பாலு, “எல்லோருக்கும் உரிமைத் தொகை வந்துவிட்டதா? மாதம் ரூபாய் வாங்குகிறீர்களே.. அதற்குப் பெயர்தான் 'உரிமைத் தொகை'. சிலருக்கு வரவில்லை. அவர்களை எல்லாம் மீண்டும் கணக்கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 28 ஆயிரம் பேருக்கு வரவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதால், விரைவில் அவர்களை கணக்கெடுத்து உரிமைத்தொகை கொடுக்கப்படும். தற்போது தமிழ்நாட்டில் ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, மக்கள் கேட்காமலேயே, பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். கடந்த மாதம் வரையில், 421 கோடி பயணங்கள் பெண்கள் இலவசப் பேருந்து பயணத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது 'தமிழ்ப் புதல்வன்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவிகளைப்போல மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது” என்று தெரிவித்தார். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் டி.ஆர்.பாலுவிற்கு சால்வை அணிவித்தும், பரிசுப்பொருள் வழங்கியும் வரவேற்பு செய்தனர்.
இதையும் படிங்க: “இது குறித்து ஒருநாள் பேசுவோம்” - தொடர்ச்சியான விசாரணை குறித்து இயக்குநர் அமீர் விளக்கம்! - Director Ameer