தருமபுரி: தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றான ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் நயாகரா என்றும் அழைக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, ஒரு அருவியாக இல்லாமல் பல அருவிகளின் தொகுப்பாகத் திகழ்கிறது.
இந்த நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், தற்போது கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக, ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று காலை முதலே ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் பயணிகளால் நிரம்பி வழிகிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள், ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றுப் பகுதியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரம் நீர் வரத்து குறைவாக இருந்த நிலையில், தற்போது ஒரு வாரமாக நீர்வரத்து 1,200 கன அடியாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மே 22-ல் மலர் கண்காட்சியுடன் துவங்கும் ஏற்காடு கோடை விழா- என்னென்ன சிறப்புகள்? - Yercaud Summer Festival