தென்காசி: கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையின் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் தற்போது சீராக உள்ளது.
இந்த நிலையில், தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், வார இறுதி நாள் என்பதாலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்குப் படையெடுத்துள்ளனர். மேலும், மெயின் அருவி பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. காலை முதலே ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி நீரில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளியல் போட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் மழைப்பொழிவு காரணமாக, வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். மக்களின் வருகையால் கரையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மக்களின் பாதுகாப்பு கருதி அருவிக்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக குற்றால அருவியில் சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலியாக மக்களை எச்சரிக்கும் வகையில் அபாய ஒலிப்பான் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குற்றாலம் மெயின் அருவியில் அபாய ஒலி.. பொதுமக்களை பாதுகாப்பாக வெறியேற்றிய போலீசார்! - COURTALLAM Flood Alert