தேனி: தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் உள்ள இந்த அருவி பகுதிக்கு நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கம்.
இந்த அருவியில் பருவமழை காலங்களிலும் இதர நாட்களிலும் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். மேலும், சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான அரிசிபாறை, ஈத்தக்காடு,தூவானம் அணைப் பகுதியிலிருந்தும் காட்டு நீரோடைகளும் சுருளி அருவியில் கலந்து அருவியில் நீர்வரத்து அதிகம் காணப்படும். இந்நிலையில் கோடைக்காலம் துவங்கியது முதலே, முற்றிலும் நீர்வரத்து இன்றி வறண்ட நிலையில் சுருளி அருவி காணப்பட்டது.
இந்தநிலையில், கடந்த இரண்டு தினங்களாக அருவிப் பகுதியின் நீர்வரத்து பகுதிகளான ஈத்தக்காடு,
அரிசி பாறை, தூவானம் அணைப் பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்பட்டதால் அருவியில் நீர் வரத்து ஏற்பட்டு நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றது.
அருவியிலிருந்து வரும் தண்ணீரில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் குளித்துவிட்டு மகிழ்ந்து செல்கின்றனர். கோடைக் காலத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவது சுற்றுலாப் பயணிகளிடமும், பொதுமக்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டியில் குடிநீர் கிணற்றில் மலம்? ஆய்வில் கிடைத்த அந்தப் பொருள் என்ன? கலெக்டர் எடுத்த அதிரடி முடிவு..!