கன்னியாகுமரி: நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட 22 மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளில் இறுதி கட்டமாக 7ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் இடம் பெற்றுள்ளதால் கடைசி கட்ட தேர்தல் அதிக கவனத்தை ஈர்த்து உள்ளது.
மோடி கன்னியாகுமரி வருகை: இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வந்து உள்ளார். டெல்லியில் இருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்து உள்ளார். இறுதிக் கட்டத் தேர்தல் பரப்புரைகள் முடிவடைந்த பின்னர் மூன்று நாட்களுக்கு கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்து இருக்கும் விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் 2 நாள்களாக தியானம் மேற்கொண்டு வரும் மோடி இன்று தியானத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்ப உள்ளார்.
விவேகானந்தர் பாறை: இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் என முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பாறை மீது அமைக்கப்பட்டுள்ளது, விவேகானந்தர் மணிமண்டபம். கொல்கத்தாவில் 1888ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கிய விவேகானந்தர் நாடு முழுவதும் சுற்றி 1892 ஆம் ஆண்டு கன்னியாகுமரி வந்தடைந்தார்.
பின்னர் அங்குள்ள ஸ்ரீபாத பாறையில் தவம் செய்யவேண்டும் என விரும்பினார். இதற்காக, கடற்கரை பகுதியிலிருந்து சுமார் 300 மீட்டர் நீந்திச் சென்ற அவர், பாறையின் மீது 3 நாள்கள் தவம் செய்ததாக நம்பப்படுகிறது. இந்த இடத்தில்தான் தற்போது மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர், பிரதமர் கேதார்நாத் குகைக்கு ஆன்மீக பயணம் சென்று அங்கு தியானம் செய்தார். 2024 ஆம் ஆண்டு வட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் முடித்து விட்டு தற்போது கன்னியாகுமரியில் தியானம் செய்து வருகிறார்.
தேர்தல் பிரசாரம் முடிந்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வேளையில் அதற்கு முன்னதாக பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ளுவது, வாக்காளர்களைக் கவரும் விதமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும், இவை மறைமுகமாகப் பிரச்சாரத்தைச் செய்யும் விதத்திலும் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்து உள்ளது. அதேபோல், திமுக சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். இதில், பிரதமர் வருவது தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அனுமதி கேட்கவில்லை என்றும் இது தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு வருவது இல்லை என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்: பிரதமர் மோடி வருகையையொட்டி, சுற்றுலாப் பயணிகள் மிகவும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதை போன்று அந்த பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வரும் பல ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல் கன்னியாகுமரியை சுற்றியுள்ள ஆரோக்கிய புரம், கன்னியாகுமரி, வாவுதுறை, புது கிராமம், கோவளம், மணக்குடி, கீழமனக்குடி உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி போன்ற கடற்கரை கிராமத்தில் உள்ள மீனவர்களும் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: 7வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு! எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டி? முழுத் தகவல்!