சென்னை: 18வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதியின் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல்.19) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
இந்நிலையில், 39 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்களும் புதுச்சேரியிலுள்ள 1 தொகுதியில் 26 வேட்பாளர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வாக்குப்பதிவில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்:
- பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள நேஷனல் ஐடிஐ உள்ள 2 வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு எற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது. பின் வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
- சென்னை, அண்ணாநகர் கந்தசாமி கலைக்கல்லூரி வாக்குச்சாவடியில் மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது.
- சென்னை, வேளச்சேரியில் உள்ள அட்வெண்ட் கிறித்துவ நடுநிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
- சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வாக்களித்தார்.
- சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்காளித்தார்.
- தமிழக பாஜக தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான கே.அண்ணாமலை அரவக்குறிச்சியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
- நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
- சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும், நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன், நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- நடிகர் அஜித்குமார் திருவான்மியூரிலுள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
- பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடி வருவதால் ஏக்னாபுரம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு மந்தமான நிலையிலேயே இருந்தது.
- புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். அதிகாரிகளில் பேச்சு வார்த்தைக்கு பின் மாலை 5 மணிக்கு மேல் வாக்களித்தனர்.
- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாக்குச்சாவடிகளுக்குள் செல்போனுடன் செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் வாக்காளர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
- செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 287ல் ஒரு மணி நேரம் வாக்கு எந்திரம் பழுதானதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
- புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி தனது RX100 பைக்கில் வந்து வாக்களித்தார்.
- கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் உள்ள கொண்டையம்பள்ளி பகுதியில் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு (77) வெயில் தாங்காமல் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.
- சேலம் பழைய சூரமங்கலம் வாக்குச் சாவடியில் முதியவர் ஒருவர் வெயிலின் தாக்கம் தாங்காமல் மயக்கம் அடைந்து கீழே விழுந்த நிலையில் உயிரிழந்தார்.
- திருவள்ளூர் மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் உள்ள நெமிலி வாக்குச்சாவடி எண் 269ல் ஓட்டு போடுவதற்காக வந்த கனகராஜ் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
- தேனி, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உப்புக்கோட்டை கிராமத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு வாக்கு இல்லை என புகார் தெரிவித்து வாக்குச்சாவடியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் ஒன்றாக வந்து வாக்குகளை செலுத்தினர்.
தமிழகத்தில் சரியாக 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்போது தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, மாலை 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மேலும் அதிகப்படியாகக் கள்ளக்குறிச்சியில் 75.67% குறைந்த பட்ச வாக்குப்பதிவு சென்னை மத்தியில் 67.35% என தெரிவித்தார்.