திருச்சிராப்பள்ளி: உடலில் வித்தியாசமாக டாட்டூ வரைவது உள்ளிட்டவற்றை செய்து வந்த திருச்சி வெனிஸ் தெருவை சேர்ந்த ஹரிஹரன், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ‘டாட்டூ’ கடை நடத்தி வந்தார். இவர் டிரெண்டிங்கிற்காக பாம்பு, ஓணான் உள்ளிட்ட விலங்குகளுக்கு இருப்பது போல் மனிதர்களுக்கும் நாக்கை பிளவுபடுத்தும் செய்முறையை செய்வதாக கூறி அதை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி உள்ளார்.
மேலும், அவர் தன்னுடைய நாக்கை பிளவுபடுத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து உங்களுக்கும் இது போன்று நாக்கை பிளவுபடுத்த வேண்டும் என்றால் டாட்டூ சென்டருக்கு வாருங்கள் என வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.
அதனை பார்த்த இளம் தலைமுறையினர் சிலர் அவரிடம் சென்று தங்களுடைய நாக்கை பிளவுபடுத்தி கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பிளவுபடுத்திக் கொண்ட வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, திருச்சி மாநகர போலீசார், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்த போது அவர் நாக்கை பிளவுபடுத்தும் செய்முறை செய்தது தெரிய வந்தது.
இதையும் படிங்க : மருத்துவ மாணவர் சேர்க்கை; தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய உ.பி.! - திமுக அரசை விளாசும் ராமதாஸ்..!
அதன்பேரில் ஹரிஹரன் (25) அவர் கடையில் பணியாற்றிய ஜெயராமன் (24) என்பவரையும் திருச்சி மாநகர கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும், போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட அவருடைய டாட்டூ கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
பின்னர் ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் இதற்கு முன்பாக மும்பையில் ஒரு டாட்டூ வரையும் இடத்தில் பணியாற்றியதாகவும், அங்கு இந்த செயல்முறையை கற்றுக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.