சென்னை: சென்னை, கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. இதில் தக்காளி, வெங்காயம் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் இருந்து 5 விழுக்காடு மட்டும் தான் வருகிறது. மீதம் 95 விழுக்காடு வெளி மாநிலங்களில் இருந்து வருகிறது. இந்நிலையில், சில நாட்களாக தக்காளி விலை குறைந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக திடீரென உயர்ந்தது. தக்காளி விலை உயர்ந்தாலும் காய்கறி விலை குறைந்து தான் காண்கின்றது.
காய்கறிகளின் விலை நிலவரம் மற்றும் வரத்து குறித்து கோயம்பேடு காய்கனி மலர் வியாபார சங்கப் பொருளாளர் சுகுமாறன் கூறுகையில், "தக்காளி விலை 1 கிலோ ரூ.70க்கும், முருங்கைக்காய் ரூ.90 - 100க்கும், வெங்காயம் 1 கிலோ ரூ.30 - 40 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறி லாரியின் எண்ணிக்கை 500 முதல் 700 இருக்க வேண்டிய நிலையில், 510 முதல் 520 வாகனங்கள் தான் வருகின்றன. பச்சை பட்டாணி சீசன் இல்லாத காரணத்தினால், பச்சை பட்டாணி 1 கிலோ ரூ.200க்கு விற்பனையாகிறது.
கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை: கேரட் ரூ.80-90, பீன்ஸ் ரூ.40-50, சௌசௌ ரூ. 40-50, உருளை கிழங்கு ரூ.35, சேணை கிழங்கு ரூ.70, சேப்பங் கிழங்கு ரூ.50, பீட்ரூட் ரூ.30-40, வெண்டைக்காய் ரூ.20, கத்தரிக்காய் ரூ. 20-39, பாவக்காய் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.30, கோவக்காய் ரூ.30, அவரை ரூ.40, சாம்பார் வெங்காயம் ரூ.70, முள்ளங்கி ரூ.30, முட்டைகோஸ் ரூ.30-40, காலிஃப்ளவர் (1 பீஸ்) ரூ.30-40, ஆடி மாதம் பிறந்துள்ளதால் காய்கறி விலை குறைய வாய்ப்பு உள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திரிபுரசுந்தரி கோயிலின் தக்கார் நியமனம் செல்லும்.. உயர் நீதிமன்றம் உத்தரவு! - Madras High Court