சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் இதே இரண்டு தினங்களுக்குத் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
வரும் ஜனவரி 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதைத் தொடர்ந்து, ஜனவரி 31ஆம் தேதி அன்று, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஆனால் வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வரும் ஜனவரி 28ஆம் தேதி மற்றும் 29 ஆகிய தேதிகளில், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தென்னிந்தியப் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில்; கரூர் பரமத்தியில் அதிகபட்ச வெப்பம் 35 கிடிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. கரூர், தொண்டி ஆகிய இடங்களில் இயல்பை விட அதிகமாக வெப்ப அளவில் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை, நாகை, பாம்பன், திருச்சி ஆகிய பகுதிகளில் இயல்பை விட அதிகமாக வெப்ப அளவு பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் பாஜகவில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர்! என்ன காரணம்?