தென்காசி: கடையநல்லூர் அருகே பழுதடைந்து நின்ற லாரி மீது, அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாயுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே பேருந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே அச்சம்பட்டி சாலையில் பழுதடைந்து நின்ற லாரி மீது, அரசு பேருந்து மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே பேருந்து நடத்துநர் உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கடையநல்லூர் போலீசார், விபத்தில் படுகாயமடைந்த 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த லாரி, கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் வந்து கொண்டிருந்து நிலையில் திடீரென பழுதடைந்த நின்றுள்ளது. இந்நிலையில், இன்று காலை தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, எதிர்பாராத விதமாக அச்சம்பட்டியில் பழுதடைந்து நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கி சேதம் அடைந்துள்ளது. மேலும், சம்பவ இடத்தில் உயிரிழந்த அரசு பேருந்தின் நடத்துநர், செங்கோட்டை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பது தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் ஜாபர் சாதிக் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை - ED Raid In Jaffer Sadiq House