சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவியிலிருந்து பாலச்சந்திரன் கடந்த 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் செயலாளராக பணியாற்றிய எஸ்.கே.பிரபாகரை நியமனம் செய்து தமிழ்நாடு ஆளுநர் ரவி உத்தரவிட்டார்.
அந்த வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 27-ஆவது தலைவராக எஸ்.கே பிரபாகர் இன்று பதவி ஏற்று கொண்டார். பதவியேற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.கே.பிரபாகர், "தமிழ்நாடு அரசு பணிகளில் சேர வேண்டும் என்ற கனவோடு அரசு பணிக்கான தேர்வுகளை எழுதி வருகின்றனர். அதற்கு அரசு பணியாளர் தேர்வாணையம் கால அட்டவணை வெளியிட்டு தேர்வுகளை நடத்தி வருகிறது.
அரசு பணித் தேர்வுகள் தலைவர் என்ற முறையில் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மட்டும் அல்லாமல் பிற தேர்வுகளையும் மாணவர்கள் எழுதி வருகின்றனர். இரு தேர்வு தேதிகளும் ஒரே நாளில் இல்லாதவாறு ஒருங்கிணைந்து செயல்படுவோம். தமிழ்நாடு அரசு பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்களின் கனவுகள் நிறைவேறும் வகையில் அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம்.
கடந்த இரண்டு வாரங்களாக எங்களுக்கு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஏற்கனவே உள்ள நடைமுறைகளை இன்னும் சிறப்பான வகையில் செயல்படுத்துவோம். போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களுக்குத் தேர்வு முடிவுகள் விரைவில் வந்தால் தான், அந்த பணியில் சேர்வதா? அல்லது வேறு முயற்சி எடுப்பதா? என்பதை முடிவு எடுக்க முடியும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் உள்ள நடைமுறை சிக்கல்களையும், பிற தேர்வுகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் கவனித்து அதில் உள்ள நல்ல தகவல்களை பெற்று பின்பற்றவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
தேர்வு எழுதிய பின்னர் தேர்வு முடிவுகள் வெளியாகும் காலத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்க நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். கால தாமதத்தை குறைப்பது தான் எங்களது முதல் பணியாக இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்களில் தேர்வு நடைபெறும் என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும். தேர்வுகள் குறிப்பிட்ட கால அட்டவணையில் நடப்பதற்கும், விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பெரிய புகார்கள் எதுவும் இல்லாமல் தரமான முறையில் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் குறைகளைக் களையவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்