விருதுநகர்: சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான ரவிச்சந்திரன்(41) என்பவர், சல்வார்பட்டியில் உமா பிளாஸ்டிக் என்ற பெயரில் பட்டாசு தயார் செய்வதற்கு தேவைப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். தனது நிறுவனத்திற்கு ஏற்கனவே மின்இணைப்பு உள்ள நிலையில் கூடுதலாக மும்முனை மின் இணைப்பு வழங்ககோரி கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வெம்பக்கோட்டை மின் பகிர்மான கழத்தில் மனு ஒன்று கொடுத்துள்ளார்.
மும்முனை மின் இணைப்பு வழங்க, வெம்பக்கோட்டை மின் பகிர்மான உதவி மின் பொறியாளர் சேதுராமன் 30,000 ரூபாயை லஞ்சம் கேட்டதாகவும், பின்னர் 10,000 ரூபாயையாவது முன்பணமாக கொடுக்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவிச்சந்திரன், விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் நேற்று, ரவிச்சந்திரனின் உமா பிளாஸ்டிக் கம்பெனியில் வைத்து, ரவிச்சந்திரனிடம் வெம்பக்கோட்டை மின் பகிர்மான உதவி மின் பொறியாளர் சேதுராமன் லஞ்சப் பணம் 10,000 ரூபாயை வாங்கியபோது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் மற்றும் அவரது குழுவினர் இணைந்து சேதுராமனை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் வெம்பக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் வைத்து சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வீடு வரைபட அனுமதி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்.. ஊராட்சி மன்றத் தலைவர் கைது!