தேனி: கேரளா மாநிலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 சக்கர வாகனம் ஒன்று போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகக் கூறி, கேரள மாநில போலீசார் 20,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து இளைஞர்கள் போலீசாரிடம் நடத்திய வாக்குவாதம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் காரில் தங்களது சொந்த வேலைக்காக கேரளாவிற்குச் சென்றுள்ளனர். அப்போது தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில், கேரள மாநில மோட்டார் வாகன கண்காணிப்புத் துறை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சோதனையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் சென்ற கார், கேரள மாநில மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், காரில் பொருத்தப்பட்டிருந்த நான்கு டயர்களுக்கும் அலாய் வீல்களாக இருப்பதாகக் கூறி, ஒவ்வொரு டயர்களுக்கும் ஐந்தாயிரம் வீதம் நான்கு டயர்களுக்கு 20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தங்கள் வாகனத்தை மட்டும் சோதனை செய்து அபராதம் விதிக்கும் போலீசார், தங்களுக்கு முன்னாள் சென்ற கேரள மாநிலப் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு ஏன் அபராதம் விதிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். பின்னர் இது குறித்து முதலமைச்சரின் தனி பிரிவுக்கு புகார் அளிக்கப் போவதாக இளைஞர்கள் ஆதங்கத்துடன் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, இளைஞர்கள் எடுத்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.