"தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிடுங்கள்" - தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் முதலமைச்சருக்கு கோரிக்கை - TN Waqf Board Chairman - TN WAQF BOARD CHAIRMAN
TN Waqf Board Chairman: தமிழ்நாடு வக்பு வாரிய பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
Published : Aug 26, 2024, 12:52 PM IST
மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா ஆயப்பாடியில் பள்ளிவாசல் அருகே புதிதாக கட்டப்பட்ட மதரஸா கட்டடம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பாஜகவின் மதவாத அரசியல் எடுபடாது: மேடையில் பேசிய ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, "பாஜக தனிப்பெருமாண்மையோடு இல்லை, மைனாரிட்டி ஆட்சியில் தான் நடக்கிறது. அவர்கள் சில கட்சியின் ஆதரவோடு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும்போது, இதுபோன்ற சர்ச்சையான சட்டங்களை கொண்டு வந்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களின் எதிர்ப்பையும் பெற்று, ஆதரவில்லாமல் ஆட்சியை இழக்கக்கூடிய நிலை கூட ஏற்பட்டு விடும். அதனால் பாஜக இது போன்ற மசோதாக்களை சட்டமாக மாட்டார்கள்.
மகாராஷ்டிரா உள்ளிட்ட 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், இதுபோன்று பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் நிறைவேற்ற போகிறோம், வக்பு சட்டத்தை நிறைவேற்ற போகிறோம் என்று சொல்லி இதன் மூலமாக சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றும்போது, பெரும்பான்மையினரின் ஆதரவை பெற்றுவிடலாம், வாக்குகளை பெற்று விடலாம் என்பது பாஜகவின் திட்டம்.
சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று பிரித்து அரசியல் செய்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதற்கு எதிராக உள்ளவர்கள் இந்திய மக்கள் என்பதை அயோத்தி உள்ளடக்கிய வைசாபாத்தில் உணர்த்திவிட்டார்கள். மதத்தை வைத்து செய்யக்கூடிய பாஜகவின் மதவாத அரசியல், வரக்கூடிய காலங்களில் எடுபடாது" எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான், "தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், இதுவரையிலும் அரசாங்கத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட ஏற்புடையது அல்லது ஏற்கப்படவில்லை என எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், அந்த அறிவிப்பு வரும் வரையில் வக்பு வாரியத்தின் தலைமை பொறுப்பு என்னிடம் உள்ளது என எண்ணுகிறேன்.
இதுவரை ஆற்றிய பணியில் குற்றம் சுமத்த வேண்டும் என்ற காரணத்திற்காக முறைகேடுகள், ஊழல்கள், பணக்காரர்களுக்கு சாதகமாக பல காரியங்களை செய்தல் என்றெல்லாம் சுமத்தப்படுகின்ற புகார்கள் மற்றும் அவதூறு பிரச்சாரங்கள் செய்பவர்களுக்கு, முன்னால் நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இப்படி பொத்தம் பொதுவாக சொல்லுவதை விட என் முன்னால் நின்று குறிப்பிட்டு விரல் நீட்டி, இந்த காரியத்தை முறைகேடாக செய்து இருக்கிறீர்கள் என்று சொல்வதற்கு யாருக்காவது துணிச்சல் இருக்குமேயானால், வெட்ட வெளிச்சத்தில் நின்று நான் அறைகூவல் விடுக்கின்றேன் வாருங்கள் என்று.
இதுவரை ஒருவர் கூட வந்த பாடில்லை. இந்த பணியில் இருந்து என்னை விடுவிங்கள் என்று கேட்டிருக்கிற இந்த நொடியிலும், அந்த அடைக்கூவல் உயிரோடு இருக்கிறது வாருங்கள். அவதூறு பிரச்சாரம் செய்பவர்களுக்காக சொல்கின்ற பதில் இது, எல்லோருக்குமானது அதல்ல" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்