தஞ்சாவூர்: தஞ்சாவூரை அடுத்த வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் முதல் மாடு அவிழ்க்கும் நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டும், காசாம்பளம் குளத்தில் முதல் மாடு அவிழ்ப்பவர் தனது மாடுகளை குளிப்பாட்டிய பின்னர், கிராமத்தில் உள்ளவர்கள் தங்களது மாடுகளை குளத்தில் ஒரே நேரத்தில் இறக்கி குளிப்பாட்டுவது வழக்கம்.
இதை காண்பதற்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், பிரான்ஸ், நெதர்லாந்து, போலந்து, இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
கிராமத்துக்கு வந்த அவர்களை கிராம மக்கள் உழவர்களின் அடையாளமாக பச்சை துண்டு அணிவித்து வரவேற்றனர். பின்னர் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டும் நிகழ்வுகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து தாரை தட்டப்படையுடன் மாடுகள் ஊரின் நடுவே உள்ள கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.
அப்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கிராம மக்களோடு பறை இசைக்கு ஏற்றவாறு ஆடிப்பாடி மகிழந்தனர். அப்போது கிராமத்தில் உள்ள வயல்களை பார்வையிட்டனர். ஊர்வலமாக வந்த மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளோடு மரபு நடை பயணமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தார். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு தெருக்களில் கோலமிட்டும், கிராம மக்கள் சார்பில் ஆங்காங்கே நெற்றியில் திலகமிட்டும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் முதல் மாடு அவிழ்த்து வீட்டில் மாட்டுக்கு பொங்கல் வைத்து, மாடுகளுக்கு ஊட்டி மகிழ்ந்தனர். பின்னர் வீரனார் கோயில் அருகே மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, காவடி ஆட்டம், காளி ஆட்டம், கரகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.