திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சூளை பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், முருகமணி(39) என்றப் பெண். இவரது கணவர் முத்துக்குமரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், முருகமணி பனியன் கம்பனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார். மேலும், எம்.ஹரிணி மற்றும் எம்.சபரி ஸ்ரீ என இரட்டை மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கணவனை இழந்து தனது இரட்டை மகள்களுடன் சாதனைப் பெண்ணாக வசித்து வருகிறார்.
அவிநாசியில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த ஹரிணி மற்றும் சபரி ஸ்ரீ ஆகிய இவ்விருவரும், நேற்று வெளியான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவில் இருவரும் ஒரே மாதிரியாக 500-க்கு 484 மதிப்பெண்கள் எடுத்து தங்களது ஒற்றுமையைக் காட்டியுள்ளனர்.
இது குறித்து பேசிய ஹரிணி மற்றும் சபரி ஸ்ரீ, "நாங்கள் இருவரும் காலை 4 மணிக்கே எழுந்து படிப்போம். ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன், அம்மாவின் அரவணைப்பு மற்றும் ஊக்கத்துடன் நன்றாகப் படித்து, நடந்து முடிந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் இருவரும் ஒரே மாதிரியாக 484 மதிப்பெண்களை பெற்றுள்ளோம். இதனை நாங்களே எதிர்பார்க்கவில்லை.
மேலும், மேற்படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று எங்கள் அம்மாவை நல்லபடியாக கவனித்துக் கொள்வோம். நாங்கள் சிறு வயதாக இருக்கும்போதே தந்தையை இழந்த தாய், பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி எங்களைப் பார்த்துக் கொண்டார்" எனத் தெரிவித்தனர்.
திருப்பூரில் தாயின் அரவணைப்பில் வளர்ந்த இரட்டை சகோதரிகள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 484 என ஒரே மதிப்பெண் பெற்று தாய்க்குப் பெருமை சேர்த்துள்ளது, அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தனது இரட்டை மகள்களை இடைவிடாத கஷ்டத்திலும் நன்றாக படிக்க வைத்து வரும் சாதனைப் பெண் முருகமணிக்கும், அவரது இரண்டு மகள்களுக்கு பலரது பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் அட்சயா, அகல்யா என்ற இரட்டையர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 500-க்கு 463 என்ற ஒரே மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான போது, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மல், நிகில் என்ற இரட்டையர்கள் 600-க்கு 478 மதிப்பெண்கள் என ஒரே மாதிரியாக எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.