சென்னை: தமிழகத்தில் பலர் புது, புது அரசியல் கட்சிகளை உருவாக்கி வருகின்றனர். பொதுவாகவே நடிகர்கள் அரசியல் கட்சிகள் ஆரம்பிப்பது என்பது நமது நாட்டிற்கு புதிதல்ல. எம்.ஜி.ஆர் தொடங்கி விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் வரை திரைத்துறையைச் சார்ந்தவர்களின் அரசியல் பயணம் தற்போது வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வரிசையில் நடிகர் விஜய் இணைந்துள்ளார்.
கல்வி விழா: தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இவர் கட்சி ஆரம்பித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
2-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா: கடந்த வருடம் எப்படி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினாரோ, அதே போல இந்த வருடமும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வானது இரண்டு கட்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய விஜய் பல்வேறு அரசியல் கருத்துக்களை மாணவர்களிடையே முன் வைத்தார். குறிப்பாக நீட் விலக்கு, நல்ல அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என பேசி இருந்தார். குறிப்பாக, மத்திய அரசை, ஒன்றிய அரசு என குறிப்பிட்டுப் பேசி இருந்தார். இவர் பேசியது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திமுகவை எதிர்த்து தான் போட்டி: அந்தவகையில், விஜய் பேசியது குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் ஈடிவி பாரத் செய்திகளிடம் கூறியதாவது, "முதல் கட்ட பரிசு வழங்கும் விழாவில் மாணவர்களிடையே நீட் தேர்வு குறித்து பேசாமல் இருந்ததை பல்வேறு நபர்கள் பல்வேறு விதமான விமர்சனங்களை முன்வைத்தனர், இவர் நீட் தேர்வு குறித்து பேச வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
எனவே தான் அவர் நீட் தேர்வு குறித்து மாணவர்களிடையே பேசினார். ஆனால், நீட் தேர்வு குறித்து அதிகம் பேச வேண்டி உள்ளது, பல்வேறு குளறுபடிகள் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை. அவர் மணிப்பூர் குறித்து பேசவில்லை, கல்விக்கு என்ன பேச வேண்டுமோ அதை சரியாக பேசியுள்ளார்.
பாஜகவை எதிர்க்கிறார் என்று நடந்த ஒரு சம்பவத்தை வைத்து மட்டும் சொல்ல முடியாது. அதேபோல, திமுகவிற்கு ஆதரவு அளிக்கிறார் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில், அவர் 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவை எதிர்த்துத்தான் தேர்தலில் நிற்கிறார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒன்றிய அரசு என்று பேசுவதால் திராவிட மாடல் அரசுக்கு ஆதரவாக இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. அன்று வந்தவர்கள் அனைவரும் விஜய் ரசிகர்கள் இல்லை. அவர்களது வீட்டில் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம்.
அங்கு வந்த மாணவர்களின் பெற்றோரின் ஓட்டு முழுவதுமாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. அது மட்டுமின்றி, மாணவர்களே இன்னும் 2 வருடங்கள் கழித்து என்ன நிலைப்பாட்டில் இருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. எனவே, இதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
விஜய் மாணவர்களுக்கு நல்லது செய்கிறார் என்பதற்காக ஒட்டு விழும் என்றால், அவருக்கு முன்னே விஜயகாந்த் ஏராளமான நன்மைகளை மக்களுக்குச் செய்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த அளவிற்கு வாக்கு எண்ணிக்கை கிடைக்கவில்லை. சில மாணவர்களும் பெற்றோரும் இன்று ஏதோ ஒரு வேகத்தில் சொல்லலாம், இதே கருத்தோடு 2026ஆம் ஆண்டு வரைக்கும் இருப்பார்கள் என்பது சந்தேகம் தான்" என்று கூறினார்.
நீட் எதிர்ப்பு: இந்நிகழ்வு குறித்து மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கூறுகையில், "விஜய் பேச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. தமிழ்நாட்டில் பாஜகவை தவிர மீதி எல்லா கட்சிகளும் நீட் எதிர்ப்பு என்ற கொள்கையில் உறுதியாக இருக்கின்றன. ஒன்றிய அரசு என்று பேசியதால் மட்டுமே திமுகவை ஆதரிப்பதாகக் கூறிவிட முடியது. மாணவர்கள் விழா என்பதால் விஜய் அப்படி பேசியிருக்கிறார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கல்வி மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும் என்ற அவரது கருத்து சரிதான். மாநில பாடத்திட்டம் மட்டுமே சமமான ஆடுகளத்தை ஏற்படுத்தும். ஏனென்றால், கிராமங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் அனைத்தும் அந்த பாடத்திட்டத்தின் படி தான் நடக்கின்றன. திடீரென்று புதிய பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்டால் அது சம வாய்ப்பை தராது. பயிற்சி நிலையங்களில் ஏராளமான பணம் செலவழித்துப் படிக்கிற மாணவர்களுக்கு மட்டும்தான் உதவியாக இருக்கும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: "ஆம்ஸ்ட்ராங்க்கு நடந்தது போல் யாருக்கும் நடக்கக்கூடாது.. கடவுளிடம் வேண்டுகிறேன்"- நடிகர் ராகவா லாரன்ஸ்