சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், "2024 -25ஆம் கல்வியாண்டின் பகுதிநேர ஆசிரியர்களுக்கு டிசம்பர் 30ஆம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது. முதலில் மாவட்டத்திற்குள்ளாகவும், அதனைத் தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான மாறுதல் கலந்தாய்வு மற்றும் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
இதனை அடுத்து, மாறுதல் பெறும் பகுதி நேர ஆசிரியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் புதிய பணியிடத்தில் சேர வேண்டும். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அதன் தொகுப்பறிக்கையினை மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும்.
மேலும், பகுதிநேர ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரில் மாறுதல் ஆணை பெறுவதால் இவ்வாணையை ரத்து செய்யவோ அல்லது மாற்றம் செய்யவோ கோரும் கோரிக்கைகள் பரிசீலிக்க இயலாது. மாறுதல் பெறும் பகுதிநேர ஆசிரியர்கள் விருப்பத்தின் மேல் மேற்கொள்ளப்படுவதால் மாறுதல் பயணப்படிகள் வழங்கப்படமாட்டாது.
இதுமட்டும் அல்லாது, மாறுதல் கோரும் பகுதிநேர ஆசிரியர்கள், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியரிடம் கொடுத்து, வரும் 20ஆம் தேதிக்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பதிவு செய்தபிறகு EMIS இணையதளத்திலிருந்து பெறப்படும் ஒப்புதல் நகலை தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒரு நகலை தலைமையாசிரியர், மாவட்டத் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதனை அடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளர், உதவி திட்ட இயக்குநர் ஆகியோர் உள்ளடக்கிய குழு முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் விண்ணப்பங்கள் அனைத்தும் EMIS இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை வரும் 24ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: பைக் டாக்சி: மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டும் - அமைச்சர் சிவசங்கர்!
அதன் பிறகு, பகுதிநேர ஆசிரியர்களின் விருப்ப மாறுதல் விண்ணப்பங்களை முறையாக பதிவேட்டில் பதிவு செய்து வைத்திருத்தல் வேண்டும். மேலும், பகுதிநேர ஆசிரியர்களின் தரவுகள் EMIS இணைய தளத்தில் சரியாக உள்ளதா என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.
அதேசமயம், முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வினை நடத்திட வேண்டும். மேலும், 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளுக்கு மட்டுமே விருப்ப மாறுதல் வழங்கப்படும். ஒரே பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணி மாறுதல் கேட்டால் தரவுகள் அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
முன்னுரிமை வழங்கப்பட வேண்டியவர்கள்:
- முற்றிலும் கண் பார்வையற்றவர்
- மாற்றுத்திறனாளிகள் (40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள்)
- மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்
- சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டையாலிசிஸ் சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை, புற்று நோயாளி மற்றும் மூளை கட்டி நோயால் பாதிக்கப்பட்டோர்.
- ராணுவத்தில் பணிபுரியும் துணைவர் உடையவர்கள்
- கணவர் அல்லது மனைவியை இழந்தவர்
- பகுதிநேர ஆசிரியராக பணியில் சேர்ந்த நாள்
- பகுதிநேர ஆசிரியர் பிறந்த வருடம் மற்றும் நாள்
அதிலும் குறிப்பாக, மேலே குறிப்பிட்டுள்ள முன்னுரிமையில் கூறும் விவரங்கள் தவறு என கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.