சென்னை: தமிழ்நாட்டில் கோடைக் காலம் துவங்குவதற்கு முன்பே, வெயில் வாட்டி வதைக்கத் துவங்கி விட்டது. இந்நிலையில், கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்கும் விதமாக கடந்த 2 நாட்களாகத் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும், காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்றும் (மே 8), நாளையும் (மே 9) தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் என மொத்தம் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் அவரது சமூக வலைத்தளத்தில் புயல் தொடர்பான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அதாவது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது சமூக வலைத்தளத்தில், "நேற்று (மே 7) ஹைதராபாத் - கடப்பா இடைடே புயல் நீண்ட பயணத்திற்கு பிறகு இன்று தமிழ்நாட்டை வந்தடைந்துள்ளது. இதன் எதிரொலியாக, தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மழை பெய்யும். சென்னையின் சில பகுதிகளில் சாலையை நனைக்கும் வகையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், வேலூர் மற்றும் ஆம்பூர் பகுதிகளில் மிகக் கனமழை பெய்யும்.
அதுமட்டுமின்றி, திருவண்ணாமலைக்குள் இந்த புயல் நகர்ந்து வருகிறது. ஆகையால், திருவண்ணாமலையிலும் மழை பெய்யும். பொதுவாக இடியுடன் கூடிய மழை 2 முதல் 3 மணி நேரம் வரை நீடிக்கும். இந்த வானிலை நிலவரம் சுமார் 12 மணி நேரம் வரை நீடிக்கும். மேலும், தமிழ்நாட்டின் உட்புறத்தில் வெப்பம் அதிகரித்துள்ளதால், மழை இன்னும் பலம் பெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கூட இதனால் மழை பெய்யுமா என்று பார்க்கலாம்" என பதிவிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, "ஜெய் ஜக்கம்மா நல்ல காலம் பொறக்கப் போகுது!.. பீக் சம்மர்ல வெயில் குறையப்போகிறது.. தமிழ்நாட்டுல நல்ல மழை வரப் போகுது" என ஒரு வித மீம்-ஐயும் பகிர்ந்துள்ளார்.