திண்டுக்கல்: திண்டுக்கல் பிரஸ் கிளப்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் நாராயணன் பங்கேற்றார். பிப்ரவரி 4ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்து 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் நாராயணன் கூறியதாவது, "தைப்பொங்கல் தினத்தன்று விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் வாழ்வு வளம்பெற, தமிழக அரசு இலவச கரும்பு மற்றும் இலவச வேட்டி சேலை ஆகியவற்றினை பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கி வருகிறது. அதேபோல் எங்களின் பொருளாதார வளம் சிறக்க, பொங்கல் பரிசுகளில் மண்பானைகளையும் சேர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களினால் மண்பானை பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளது. மேலும், மண்பானைகளை உடையும் தன்மையாக கருதி பொதுமக்கள் வாங்க மறுத்து வருகின்றனர். ஆனால், அகழ்வாராய்ச்சியில் மண்பானைகள், ஓடுகள், சிலைகள், கலைநயமிக்க பொருட்கள் என பல்வேறு பொருட்கள் மண்ணால் மட்டுமே செய்யப்பட்டு உள்ளன. இவைகள் பல ஆண்டுகள் பூமியில் புதைந்திருந்தாலும், தற்போது உள்ள ஆராய்ச்சியில் உடையாமலே உள்ளது.
சிறுபான்மை மக்களின் குலாலர் சமுதாயத்தைச் சேர்ந்த எங்களுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் கட்சிக்குத்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் முழு ஆதரவு மற்றும் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வோம். இல்லையெனில், வரும் சட்டமன்றத் தேர்தலில் 42 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம்" எனத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது தென் மண்டலத் தலைவர் ஐயப்பன், மாவட்டத் தலைவர் கார்த்திக், செயலாளர் ஜெகதீஸ்வரன், மாநில இளைஞர் அணித் தலைவர் பாண்டியராஜன், மாவட்ட இளைஞரணித் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பிரபல நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழந்தார்!