கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கபட்டதை தொடர்ந்து அணைத்து அரசியல் கட்சியினரும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் மற்றும் கோவை நாடளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், "கோவை நாடளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பு அட்டகாசமாக இருக்கிறது. எதிரணியினர் அனைவரும் டெபாசிட் இழக்கும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்க கூட்டணி கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்" என்றார்.
இதனையடுத்து திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து அண்ணாமலை விமர்சித்து உள்ளாரே என்ற கேள்விக்கு, "எதிரில் அதிமுக என்ற இயக்கம் உள்ளது. பிரதான எதிர்க்கட்சி அதிமுக. அது குறித்த கேள்விகளை மட்டும் கேளுங்கள். சில்லறை கட்சிகள் குறித்து கேட்டால் பதில் சொல்ல முடியாது.
தேர்தலுக்காக கமிஷனை பொறுத்தவரையில் ஒரு தொகுதிக்கு 95 லட்ச ரூபாய்களை செலவு செய்யலாம் என வைத்து இருக்கின்றார்கள். எங்களது நண்பர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் எங்களுடன் தேர்தல் பிரசாரத்திற்காக வருகிறார்கள், அவர்களுக்கு டீ, காபி போன்ற செலவுகள் எல்லாம் இருக்கும். அண்ணாமலைக்கு அப்படி யாரும் வருவதில்லை, அதனால் ஒரு பைசா கூட செலவு இல்லை என்று நினைக்கிறேன்" என்றார்.
உதயநிதி ஸ்டாலின் செங்கலை வைத்து அரசியல் பண்ணுகிறார், அந்த ஸ்கிரிப்டை மாற்ற வேண்டும் என்று அண்ணாமலை பேசியிருந்தது குறித்த கேள்விக்கு, "ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். திமுகவைத் திசை திருப்புவதற்காகவே இது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. தேர்தல் களத்தில் திமுக அதிமுக மட்டுமே உள்ளது.
எங்கள் எதிரி அதிமுக தான். அதைக் குறி வைத்து அடிப்போம். அதற்காக பொதுமக்களை சந்தித்து சென்று கொண்டிருக்கும் எங்களிடம் மற்றவர்கள் பற்றி கேள்வி கேட்டால் அது எங்களுக்கு கவனச் சிதறல் மட்டுமே. எனவே பாஜக போன்ற சில்லறை கட்சிகளை ஓரங்கட்டி விட்டு களத்தில் இருக்கும் உண்மையான எதிரியை வீழ்த்த வியூகம் வகுத்து கோவையில் மகத்தான வெற்றி பெறுவோம். கோவை தேர்தல் களம் சிறப்பாக உள்ளது. கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார், தேர், இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறும்: நெல்லை கூட்டத்தில் முதலமைச்சர் ஆவேச பேச்சு! - Mk Stalin Propaganda