மதுரை: மதுரையில் மழைநீர் வடிகால் சீரமைப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் திட்ட அறிக்கை அளித்தபின்னர் பணிகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். மதுரை ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதியில் ஆய்வை தொடங்கிய அமைச்சர் நேரு, செல்லூர், பந்தல்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வினை மேற்கொண்டார். ஆய்வின்போது அந்தந்த பகுதி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார். ஆய்வின் போது அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர். மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, "மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரால் பாதிப்பு ஏற்படாத வகையில் திட்ட அறிக்கையை மாவட்ட நிர்வாகம் அனுப்ப உள்ளது. அதன் பின்னர் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. மழைநீர் வடிகால்களைச் சீரமைக்க முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பணிகளுக்கு தேவையான நிதி மாவட்ட ஆட்சியரின் அறிக்கைக்கு பிறகு முதலமைச்சரின் ஒப்புதலோடு வழங்கப்படும்,"என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்