சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிபிஏ மற்றும் பிசிஏ படிப்புகளைப் புதிதாக தொடங்க அனுமதி வழங்குவதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது போல், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளிலும் நிறுத்தி வைக்க வேண்டும் என கல்லூரி கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் பிபிஏ மற்றும் பிசிஏ படிப்புகள் வழங்குவதைக் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான பிரிவிலிருந்து மாற்றி தொழில்நுட்ப பாடங்களாக 2024 - 2025 ஆம் ஆண்டு முதல் கல்வி ஆண்டு முதல் நடத்துவதற்கான விதிமுறையை அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் கொண்டு வந்ததது.
அந்த வகையில் பிபிஏ மற்றும் பிசிஏ படிப்புகளை தொடங்குவதற்கான அனுமதியை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் அனைத்து கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பெற வேண்டும் என்கிற புதிய விதிமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செட் தேர்வை நடத்துகிறது ஆசிரியர் தேர்வு வாரியம்! உதவிப் பேராசிரியர் பணிக்கான நேரடித் தேர்வு எப்போது?
இந்த நிலையில், அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலின் புதிய விதிமுறைக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் அடுத்து வரக்கூடிய கல்வி ஆண்டில் பிபிஏ மற்றும் பிசிஏ படிப்புகளைத் தொடங்குவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் பட்சத்தில் இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அனுமதி அளிக்க கூடாது. மேலும், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் , சுயநிதிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதியதாக துவங்குவதற்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் அனுமதியை பெற கூற வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்