சென்னை: லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட பிரபல யூடியூபர் இர்பான், அவரது மனைவியுடன் இணைந்து சில நாட்களுக்கு முன் துபாய் சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவமனையில் தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்து, அதனை தன் யூடியூப் சேனல் உள்பட சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சுகாதாரத் துறை தாமாக முன்வந்து இர்பானுக்கு குறிப்பாணை வழங்கியுள்ளது.
இது குறித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. யூடியூபர் இர்பானின் இத்தகைய செயலால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது.
எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர், (PCPNDT ACT 1994) மற்றும் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் இர்பானுக்கு மே.21 ம் தேதி பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பானை சார்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், இர்பானால் பதிவிடப்பட்ட அந்த வீடியோவை உடனடியாக நீக்கிட வலையொளி தளத்திற்கும், கணிணி குற்றம் (Cyber Crime) பிரிவிற்கும் மே.21 ம் தேதி கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருவின் பாலினம் அறிவதும், அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள், ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.